ஒருநாள் எங்கள் அலுவலகத்துக்கு மணியார்டர் கொடுக்க வந்த தபால்காரர் சொன்ன தகவல் ஆச்சர்யம் அளித்தது. ஒரு ஆள் தினமும் ஏழு ரூபாய் மணியார்டர் எங்கேயோயிருந்து அனுப்புவாராம். அவர் அனுப்பும் பெறுநரில் ஆள், வீடு எதுவும் கிடையாதாம்!சரி மணியார்டரை திருப்பி அனுப்பி விடலாம் என்று பார்த்தால் அனுப்புனர் முகவரியும் அதேதானாம்.
ஆக அந்த தொகை அரசாங்கத்திற்கு சென்று விடுகிறது.
இப்படி இதுவரை ஒருலட்ச ரூபாய் போல அனுப்பியிருக்கிறார். அந்த முகம் மற்றும் முகவரி தெரியாத நபர்.
இந்த லட்சணத்தில் ஒருநாள் எதேச்சையாக ஏழு ரூபாய் அனுப்ப..இந்த தபால் காரர் வேலை செய்யும் அலுவலகத்துக்கே அந்த ஆசாமி வர.., எல்லோரும் பிடித்துக் கொண்டனர் போல!
அந்த ஆளுக்கு அறுபது வயது இருக்கலாமாம்! அந்த பழைய முகவரியும் ஏழு ரூபாயும் மனதில் பதிந்து விட்டது போல!
பாவம் தாய்க்கோ தாரத்துக்கோ அனுப்பும் எண்ணம் மட்டுமே இருப்பதால் அந்த முகவரிக்கு ஏழு ரூபாய் சென்றுக் கொண்டே இருக்கிறது.
இந்த தபால்காரர்கள் பணம் அனுப்பின பிச்சிடுவேன் என மிரட்டினால் வேறு தபால்நிலையத்துக்கு போய் அனுப்பி விடுகிறாராம்.
இந்த ஏழு ரூபாய் நோட்டால் பெரிய பேஜாராகி இருக்கிறது அந்த தபால் நிலையம்.
ஆனால், அவரின் மனதில் பதிந்த அந்த ஏழு ரூபாயை யாரால் அழிக்க முடியும்.
ஆண்டவன் எனக்கு இரண்டு கருணைய காட்ட வேண்டும். ஒன்று அந்த நபரை காப்பாற்ற வேண்டும். இன்னொன்று அந்த நபரை நான் பார்க்க வேண்டும்.