Friday, June 18, 2010

தப்பிச்சுகோங்க...!


* ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்கள். திடீரென்று இன்றே படம் பார்க்க நினைக்க வைத்த ஊழ்வினை, டிக்கெட் கிடைக்க வைத்து, படம் பார்க்க வைத்து ஊட்டிவிட்டது.* எதையும் வெளிப்படையாக வெளியில் சொல்லாமல், படம் எடுத்து அனைவரையும் ஏமாற்ற நினைக்கும் மணி ரத்னத்தின் ஏமாற்று வேலை இதிலும் தொடர்கிறது. படத்தின் ஆரம்பித்திலேயே சொல்கிறார்கள் - இதில் வரும் சம்பவம் யாரையும் குறிப்பிடுவன அல்லவாம். தைரியமிருந்தால் வெளிப்படையாகச் சொல்லிப் படம் எடுக்கவேண்டும். வெளியில் சொன்னால் அராஜகம் செய்வார்கள் என்று மணி ரத்னம் சொல்ல வாய்ப்பில்லை. ஏனென்றால் ஒரு தடவை கூட அவர் பொதுவில் உண்மையைச் சொல்லிப் படம் எடுத்ததில்லை.
இருவர் படத்துக்கும் தமிழக அரசியலுக்கும் தொடர்பில்லை என்று சொன்னவர் மணி ரத்னம். தளபதி கதைக்கு மகாபாரதத்துக்கு நன்றி கார்டு போடாதவர். இதில் ராமாயணத்துக்கும் நன்றி கார்டு போடாமல் விட்டுவிட்டார்.* கார்த்திக்கை அனுமாருக்கு இணையாகக் காட்ட, முதல் காட்சியிலேயே கார்த்திக்கை குரங்கு போல தவ்வ வைத்தது ‘அட்டகாசமான யுத்தி.’ கார்த்திக்கும் கடைசி வரை தனது குரங்குச் சேட்டையை நடிப்புதான் என்று நம்பி செய்துகொண்டே இருக்கிறார். அதிலும் சீதை ஒரு மரத்தடியில் இருக்கும்போதே மேலே இருந்து அனுமார் பேசும் காட்சி நகைச்சுவையின் உச்சக்கட்டம். அந்த அனுமார்தான் நம்மைக் காப்பாற்றவேண்டும்.* சீதை உலக அழகி என்பதற்காக கிழவி ஆன பிறகும் நடித்துக்கொண்டே இருந்தால் எப்படி? சீதையானாலும் கிழவி அல்லவா! ஒரு சில காட்சிகளில் சரோஜாதேவி போலத் தெரிந்து பல பெரிசுகளின் உயிரை எடுக்கிறார் ஐஸ்வர்யா ராய்.* தமிழ் பேசினால் நடிக்க வராது என்பதை ஐஸ்வர்யா ராய் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.* நடிகர்களின் முகத்துக்கு அருகில் க்ளோஸ் அப் காட்சி வைத்து போரடித்துப் போன மணி ரத்னம், மூக்கு காது கண் என ஒவ்வொன்றுக்கும் க்ளோஸ் அப் காட்சிகள் வைத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்.* வசனம் பாதி புரியவில்லை, மீதி கேட்கவில்லை.* சுஹாசினி ஜெயா டிவியில் பேசுவது போலவே நினைத்துக்கொண்டு தனது இண்டலக்சுவல் பேத்தலை வசனமாகக் கொட்டியிருக்கிறார். இது மணி ரத்னத்துக்கும் பிடித்துப் போன விஷயம் என்பதால் பல இடங்களில் வசனங்கள் பல்லை இழித்துக்கொண்டு நிற்கின்றன.* திடீர் திடீரென மேட்டுக் குடி என்றெல்லாம் வசனம் வருகிறது. ராமாயணம் வழியே தொழிற்சங்க வசனம் எழுதிப் பார்த்திருக்கிறாரோ என்னவோ. கார்டு போடும்போது நன்றி ரிலையன்ஸ் என்றும் அம்பானி என்றும் போடுகிறார்கள். ஓங்குக முதலாளிகளாகப் பார்த்து நடத்தும் தொழிற்புரட்சி.* படம் முழுக்க அருவியின் இரைச்சல். கூடவே ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசை இரைச்சல். யாரோ ஒரு பெண்மணி கடைசி வரை படம் முழுக்க ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ எனக் கத்திக்கொண்டே இருக்கிறார். பணம் செட்டில் செய்யவில்லையோ என்னவோ. இசைப்புயலாக நுழைந்த போது சின்ன வயசு என்றார்கள். எத்தனை அனுபவம் வந்தாலும் பின்னணி இசையில் இன்னும் சின்ன வயசாகவே அவர் இருப்பது கொஞ்சம் ஓவர்.* ஒரே ஒரு உருப்படியான பாடலை தேவையற்ற இடத்தில் வைத்து சொதப்பியிருக்கிறார் மணி ரத்னம். வசனமா பாடலா என்று அனைவரும் ஸ்தம்பித்து நிற்கும்படியாக மற்ற வசனப் பாடல்கள் வந்து மறைகின்றன. இது போன்ற படத்துக்கு எதற்குப் பாடல் என்னும் தைரியம் இன்னும் மணி ரத்னத்துக்கு வரவில்லை. படம் கொஞ்சமாவது சம்பாதிக்க வேண்டாமா என்ற எண்ணமாக இருக்கலாம்.* ராவணன் என்றால் நெகடிவ் கேரக்டர், அதனால் கொஞ்சம் அலட்ட வேண்டும் என்று நினைத்து விக்ரம் அடிக்கும் அலட்டல் தாங்க முடியவில்லை. பக் பக் பக் என்று அவர் என்னவோ செய்யும் காட்சி மனதைப் பிசைகிறது, எப்படி ஒரு நல்ல நடிகரை ஒரே அடியாய் அடித்துப் போட்டுவிட்டாரே மணி ரத்னம் என. அதிலும் ஐஸ்வர்யா ராய் கடைசிக் காட்சியில் அதே போலச் செய்யும்போது, மணி ரத்னத்தின் முகம் கிராஃபிக்ஸில் மறைந்து கே.எஸ்.ரவிகுமார் பக் பக் பக்கெனச் சிரிப்பது படத்தின் ஹைலைட்.* பிரபுவைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. இதில் கண்மை வேறு. என்ன கொடுமை சரவணன் இது என்று அவர் சீரியஸாகப் பேசிய தமிழ் மக்கள் இப்போதும் அவர் சீரியஸாக நடிக்கும்போதெல்லாம் சிரிக்கிறார்கள். இப்படி ஒரு வரம் கேட்டாலும் கிடைக்காதது.* ரஞ்சிதாவுக்கு ’ஒரு சீன்’ கூட இல்லை. ஏன் வந்தார் என்பதே தெரியவில்லை. ஆனாலும் தமிழக மக்கள் விடாமல் கைத்தட்டுகிறார்கள்.* அழகான கதாநாயகி வருகிறார்? என்ன ஆகும் அடுத்து? ஆமாம், காதல்தான். அண்ணன் முரட்டு அண்ணன், என்ன ஆகும் அடுத்து? அதேதான், விக்ரம் கொஞ்சம் முறைப்புடன் கொஞ்சம் சிரிப்புடன் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார். கல்யாணம் நடக்கிறது, என்ன ஆகும்? நாம் நினைப்பது போலவே ப்ரியாமணியைக் கெடுத்து விடுகிறார்கள். அப்புறம் என்ன ஆகும்? அண்ணன் வீறு கொண்டு எழுந்து, தனிப்பட்ட வன்மம் தீர்க்கக் கிளம்புகிறான். பொதுவுடைமை வசனம் பேச மட்டும் மறப்பதில்லை! இன்னும் எத்தனை நாள்தான் இப்படி பார்ப்பது? அதுவும் மணி ரத்னத்தின் படத்தில்! ஜீரணிக்கவே முடியவில்லை.* இத்தனை நேரம் ஓடிய படத்தில் ஒன்று கூடவா உருப்படி இல்லை? அந்த சந்தோஷத்தை நமக்குத் தருவது சிவன் மட்டுமே.* ஐஸ்வர்யா ராயும், விக்ரமும் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள் என்றெல்லாம் உணர்ச்சி வசப்படலாம். அதெல்லாம் எதோடும் ஒட்டாமல் நிற்பது பெரிய குறை.* பிரிதிவிராஜ் ஐஸ்வர்யா ராயை நினைத்து உருகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராய் உருகுவதையெல்லாம் காண்பிக்கவில்லை. எங்கே பின்னர் ஐஸ்வர்யா ராய் விக்ரமை நினைத்து உருகுவது போல் காண்பித்தால் மக்கள் நெளிவார்கள் என்று இயக்குநர் நினைத்துவிட்டாரோ என்னவோ. ஆனால் திடீரென்று என் கணவர் கடவுளுக்கும் மேல் என்றெல்லாம் பேசுகிறார் ஐஸ்வர்யா ராய். அங்கே ஏன் கடவுள் வந்தார், ஏன் கடவுள் சிலை வந்தது என்பதற்கெல்லாம் ஒரு லாஜிக்கும் இல்லை. ஒரே ஒரு காரணம், சுஹாசினி தனது இண்டெலக்சுவலைக் காட்டவேண்டும் என்பது மட்டுமே!* மணி ரத்னம் இப்படி பழங்காலக் கதையை மார்டனாக எடுக்கிறேன் என நினைத்துக்கொண்டு, பாதி கேட்காத வசனத்தைப் பேசிகொண்டு, சுஹாசினியை வசனம் எழுத வைத்துக்கொண்டு, ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்துக்கொண்டிருந்தால், இனியும் காணச் சகிக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தைரியமாக வெளியில் உண்மையைச் சொல்லிப் படம் எடுக்க முன்வரவேண்டும். இல்லை என்றால் காதல் கதையை எடுப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். ஒரு நேரத்தில் இரண்டு மொழிகளில் எடுப்பதால், சில காட்சிகளில் வரும் நடிகர்கள் தமிழ் முகமாக இல்லாமல் இருப்பது பெரும் அந்நியத் தன்மையை ஏற்படுத்துகிறது.* ராவணன் என்று படம் வருகிறது. எப்படியும் சீதை ராவணனுடன் சேர்ந்து விடுவாள் என்று நினைத்து, கலை சுதந்திரத்தை ஆதரிக்கவேண்டும் என்றெல்லாம் முன்முடிவுகளுடன் சென்றேன். படத்தைப் பார்த்தால், சீதை மீண்டும் ராமனுடனே ஓடினால் கூட சந்தோஷப்பட முடியாத அளவு உள்ளது.

நன்றி- இட்லி வடை.பிளாக்ஸ்பாட் .




Thursday, June 17, 2010

நல்லா இருக்குய்யா உங்க நியாயம்?

சில தினங்களுக்கு முன்பு தனியார் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து சங்கரி என்ற பெண்மணி கலந்து கொண்டார். சத்துணவு கூடத்தில் சுமார் 27 ஆண்டுகளாக பணியாற்றும் அவருக்கு இரண்டு மகள்கள். இரண்டு ஏக்கர் விவசாய நிலம் இருந்தும் தண்ணீர் வற்றிவிட்டதால் விளைச்சல் இல்லை. கணவருக்கு வேலை இல்லை. ஏழ்மையான குடும்பம். ஆனால் இரு மகள்களையும் நன்றாக படிக்கவைத்து மூத்த மகளுக்கு திருமணத்தையும் முடித்துவிட்டார்கள்.இளைய மகளை வங்கியில் கடன் வாங்கி, உயர் பட்டப்படிப்பு வரை படிக்கவைத்துவிட்டார்கள். படிப்பு முடியும் போதே நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைக்கும் வாய்ப்பு. மகள் சம்பாதித்து கடனை கட்டிவிடலாம் என்று நிம்மதியாய் இருக்க, தேர்வு முடிந்து வீட்டிலிருந்த மகளுக்கு திடீரென காய்ச்சல். அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த சில மணி நேரங்களிலேயே உயிர் போய்விட்டது. மூளையில் கட்டி ! விவசாயத்திற்காக அரசாங்கத்தால் கொடுக்கப்படும் கடன்கள், சம்பந்தப்பட்ட விவசாயி அகால மரணம் அடைந்தால் அந்தக் கடன் அரசால் தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயத்தில் வருமானம் இல்லாததாலும், வருமானம் ஈட்டக் கூடிய குடும்பத் தலைவர் மரணம் அடைந்துவிட்டதாலும், அந்த குடும்பத்தை காப்பாற்ற கடன் தள்ளுபடி செய்யும் கொள்கையை அரசு வைத்துள்ளது. ஆனால், கல்வி கடனுக்கு அப்படியில்லை.கல்விக் கடன் பெருபவர்கள் பெரும்பாலும் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். திடீரென்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிட்டால் அந்தக் குடும்பத்தால் கடனை திருப்பி கட்ட இயலுமா? பிள்ளைகள் சம்பாதித்து கடனை அடைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, பெற்றோர்கள் கடன் வாங்கி படிக்க வைக்கிறார்கள். கடன் பெற்ற மாணவனோ, மாணவியோ மரணமடையும் போது அந்த கடனை தள்ளுபடி செய்ய அரசு ஆவணம் செய்யுமா?

- நன்றி- மாபெரும் தலைவன் கேஆர் இளங்கோ ப்ளாக்..

விபரீத விளம்பரங்களை அரசே ஆமோதிக்கலாமா?


ஜெயலலலிதா அரசு இருக்கும் போதே, சிகரெட் தொடர்பான புகைக்கும் பொருட்களுக்கு பொது இடத்தில் தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஏனோ அதை விற்பதற்கு, தமிழ்நாட்டில் எங்கேயும் தடை கிடையாது. இது மட்டுமில்லாமல், புகையிலை சம்பந்தமான பான்பராக்,ஹான்ஸ், மானிக்சந்த் போன்ற குட்கா அயிட்டங்களை கடைகளில் விற்பதற்கே அதிமுக அரசு தடை செய்தது. இதனால் மாநகராட்சி சம்மந்தமான ஆட்கள், திடீர்திடீரென கடைகளில் ஆய்வு செய்வதும் குட்கா அயிட்டங்கள் விற்பவர்களுக்கு, ஆயிரக்கணக்கில் அபராதம் விதிப்பதும் நடந்தது. இதில் ஆய்வு செய்கிறேன் பேர்வழி என்று, லஞ்ச லாவண்யமும் புகுந்து விளையாடியது. ஆனால், இன்றைய நிலையே வேறு.. அந்த குட்கா அயிட்டங்களை தமிழக அரசே சென்னை போன்ற மாநகரங்களில் அரசு பேருந்துகளின் பின்னால், போர்டு வைத்து விளம்பரம் செய்கிறது. (உதாரணம் : சாந்தி சூப்பர் என்கிற விளம்பர போர்டு) இதில் உள்ள நியாயம் மக்களுக்கு புரியாமல் விழிக்கிறோம். அரசுகள் மாறிப் போனால் போதை பொருட்கள் பேதையாகிவிடுமா? போதை பொருட்களை விற்பனை செய்வது தவறு என்கிற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும், அதை குறைந்தது விளம்பர படுத்தாமலவாது இருக்கலாமே! மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் விளம்பரங்கள் நிறுத்தப்படுமா?

திருட்டு பசங்க..!


திடீரென அவசர வேலைக் காரணமாக செல்லும் பயணிகளுக்காக, இரயில்வே துறையில் தக்கல் முறை நடைமுறைப் படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த தக்கல் முறையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பதிவு செய்ய முடியும்.இதன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு சாதாரண கட்டணத்தை விட கூடுதல் கட்டணமாக ரயில்வே துறை வசூலிக்கும். ஆனால், இந்த முறையில் காலை எட்டு மணிக்கு திறக்கும் தக்கல் டிக்கெட் கவுண்டர் அரை மணிநேரத்துக்குள்ளேயே, விற்று தீர்ந்து விடும். நீங்கள் சாதாரண ஒரு ஆளாக இருப்பின், நிச்சயமாக தக்கல் முறையில் ரிசர்வ் செய்ய முடியாது. காரணம், இன்னும் இன்னும் கூடுதலாக வசூலித்துக் கொண்டு , டிக்கெட் வாங்கித் தர புரோக்கர்கள் செயல்படுகிறார்கள். அதுவும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் காலை எட்டு மணிக்கு திறக்கும் முன்பதிவு மையத்துக்கு,இரவு ரயில்வே சர்ட்டர் கதவை சாத்தும் பொழுதே, புரோக்கர்கள் இடத்தை ஆக்கரமித்து படுத்துக் கொள்கின்றனர். நீங்கள் இரவு மூன்று மணிக்கு போனால் கூட கூட்டம் நிரம்பி வழியும். அரை மணிநேரத்தில் எல்லா இடங்களிலும் புக்கிங் செய்வதால், மாம்பலம் ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் புரோக்கர்கள் மட்டுமே வாங்கியிருப்பர். மீதமுள்ள சகபயணிகள் டிக்கெட் இல்லாமல் திரும்பி போக வேண்டியது தான். இது தினமும் நடக்கும் பிஸினஸ். இதனால் நேரடியாக வந்து டிக்கெட் வாங்கும் நடுத்தர வர்க்கம் மிகவும் பாதிப்படைகிறது.‘ஊருக்கு செல்லும் பயணியா நீங்கள்?’ என்று அடையாள அட்டைகளை காண்பிக்க சொல்லி பரிசோதித்து விட்டு அவர்களுக்கு மட்டும் டிக்கெட் கொடுத்தால், நல்லது. இல்லையென்றால் புரோக்கர்களின் கொடி மட்டுமே பறக்கும். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

படிக்க வைக்க பயமா இருக்கு?


கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டன " என்று எழுதினார் கருணாநிதி அவர்கள். கோவில்கள் என்பதற்கு பதிலாக நாம் தனியார் பள்ளிகள் என்று போட்டு கொள்ளலாம்.பள்ளிகளின் கட்டணத்தை முறை படுத்தி, அரசின் அறிவிப்பு வெறும் பேச்சளவில் அல்லது அறிக்கை அளவிலேயே உள்ளது என்பது கண்கூடு. இப்படி ஒரு விஷயம் இருப்பதையே பல தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது காட்டிக்கொள்ளவில்லை.தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை பற்றி அரசுக்கு அறிவிக்க முறையாக இதுவரைக்கும் ஒரு "ஹெல்ப் லைன்" வசதி ஏன் தொடங்கப்படவில்லை என்று தெரியவில்லை.தனியார் பள்ளிகள் பற்றி நான் கண்ட, கேட்ட, பார்த்த விஷயங்களை பற்றி இங்கே எழுதிகிறேன். கூடவே பெற்றோர்களின் அறியாமை பற்றியும் நாம் பார்ப்போம்.1 . ஒரு தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்காக ரூ. 50 ஆயிரம் கட்டணம் வாங்கினார்கள். ஆனால், பில் ஏதும் தரவில்லை. கட்டட நிதி என்று சொல்லி இருக்கிறார்கள்.2 . ஒரு பள்ளியில், குழந்தையை சேர்க்க வந்த பெற்றோர்களிடம் தனியாக இன்டர்வீயு நடத்தி, அவர்கள் இருவரும் கண்டிப்பாக டிகிரி படித்து இருக்கவேண்டும் என்றவர்கள்,, அவர்களின் சான்றிதழ் களை வாங்கி சோதனை செய்தும் இருக்கிறார்கள்.3 . சேர்க்கையின் போது, அரசின் அறிவிப்பை சுட்டி காட்டிய பெற்றோரை, கடுமையாக மிரட்டி இருக்கிறது ஒரு பள்ளியின் நிர்வாகம்.4 . சென்னையில் உள்ள பத்மா சாரங்கபாணி பள்ளியில் வசூலிக்க படும் கட்டணத்தில், ஒரு மாணவன் BE படித்துவிடலாம் என்று சொன்னார் ஒரு நண்பர். பெற்றோர்கள் இங்கு நடைபெறும் கொள்ளையை எதிர்த்து சாலைமறியலில்இறங்கினார்கள்.5 . மற்றொரு பள்ளியில், நாங்கள் கட்டணத்தை குறைக்க மாட்டோம், விருப்பம் இல்லை என்றால் உங்கள் குழந்தைகளை கூட்டி கொண்டு போங்கள் என்று வெளிப்படையா அறிவித்துஇருக்கிறார்கள்.6 . ஒரு நாளிதழில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, ஒரு மிக பெரிய தொகை கொடுத்து, ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு ஒன்பதாவது படிக்கும் தனது மகனை மாற்றினார் ஒருவர். அதற்க்கு அவர் சொன்ன காரணம், " இங்கே கோச்சிங் சரியில்லை சார், வரும் வருஷம் டென்த் ஆச்சே "என்றார்.7 . ஒன்பதாவது படிக்கும் போதே பத்தாம் வகுப்புக்கும், பிளஸ் ஒன் படிக்கும் போதே பிளஸ் டூ படிப்பிற்கும் சிறப்பு டியுஷன்களை தொடங்கிவிடுகிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள். நிறைய மார்க் வாங்க வேண்டுமே என்கிறார்கள்.8 . பள்ளி செல்லும் நேரம் தவிர, குறைந்தது ஆறு மணிநேரம் டியுஷன்களில் செலவு செய்கிறார்கள் பத்தாம் மற்றும் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள். பள்ளி கட்டணத்துக்கு இணையாக இதற்கும் செலவு செய்கிறார்கள்பெற்றோர்கள்.9 . ஒரு புகழ் பெற்ற தனியார் பள்ளியில் தம் குழந்தைகள் படிப்பதையே இன்று உள்ள படித்த மற்றும் படிக்காத பெற்றோர்கள் விரும்புவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.இவர்கள் அனைவரின் முகத்திலும் தண்ணிரை தெளித்து, அவர்களின் மயக்கத்தை போக்கி இருக்கிறார் ஜாஸ்மின் என்ற மாணவி.திருநெல்வேலியில், ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்யும் ஏழை தந்தை, படிக்காத தாயார் என்ற சூழ்நிலையில் வளர்ந்து ஒரு பெரும் சாதனை நிகழ்த்தி இருக்கிறார் ஜாஸ்மின்.நெல்லை டவுன் அருகே உள்ள கல்லணை எம்.பி. ல் மாநகராட்சி பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று இருக்கிறார் ஜாஸ்மின். இதில் அனைவரும் கவனிக்க வேண்டிய மற்றும் ஒரு விஷயம்...இவர் தனியாக டியுஷன் எதுவும் படிக்கவில்லை என்பதே.தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்தில், அரசு பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்த என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இன்று ஜப்பானில் உள்ள ஒரு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். இன்னொருவர், முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையில் படித்து, நாகை அரசு மருத்துவமனையில் டாக்டராக இருக்கிறார்.ஊட்டி கான்வென்டில் படித்து வீணா போனவர்களும் இருக்கிறார்கள்,மிக சாதாரண அரசு பள்ளியில் படித்து சாதித்தவர்களும் இருக்கிறார்கள்."முயற்சியும், ஈடுபாடும் மட்டுமே நான் வெற்றி பெற காரணம் " என்கிறார் சாதனை மாணவி ஜாஸ்மின்.படிக்கிற பிள்ளைகள் எங்கு இருந்தாலும் படிக்கும் என்பதற்கு இந்த உதாரணங்கள் போதும்தானே?


நன்றி- இட்லி வடை.காம்